நிலங்களும் பெயர்க்காரணங்களும்
புவியியலிலும் வகைகளுக்கேற்ப பெயரிட்டுள்ள அறிவியல் திறம் வியந்து போற்றுதற்குரியது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை வகைப்பாட்டில் சிறந்த திணை யறிவியல் உலகில் பிற யாரும் கண்டறியாததன்றோ. இவற்றுள்ளும் உட்பிரிவுகள் அறிவியலுக்கேற்ற வகையில் அழைக்கப்படுவது அருந்தமிழ்ச் சிறப்பன்றோ.
‘மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. மிக உயர்ந்த மலை ஓங்கல், குறுக்கே நீண்டு இருக்கும் மலை விலங்கல், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை அடுக்கம், எதிரொலி செய்யும் மலை சிலம்பு, மூங்கிற்காடுகள் உள்ள மலை வரை, காடுகள் அடர்ந்த மலை இறும்பு, சிறிய மலை குன்று, மண்மிகுந்த மலை பொற்றை என மலைகளை வகைப்படுத்திய அறிவியல் சிறப்பு, உலகில் இன்று கூட வேறு எங்கும் இல்லை என நாம் பெருமையாகக் கூறலாம்.
மதுரையிலுள்ள அழகர்மலை சிலம்பு வகையைச் சார்ந்தது. எனவே, இங்கு ஓடும் ஆறு ‘சிலம்பாறு’ எனப்பட்டது. இவ்வறிவியல் உண்மையை உணரா ஆரியர் சிலம்பு என்பததைக் காலில் அணியும் சிலம்பாகக் கருதி ‘நூபுர கங்கை’ என மாற்றிவிட்டனர். பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள், இத்தகைய பெயர் மாற்றங்களால், தமிழறிவியல் வளம் புதைந்து போயுள்ளதை உணர வேண்டும்.
மலை வகைப்பாட்டைப் போன்றே பருத்த உயரமான மரங்கள் அடர்ந்த காடு வல்லை, சிறு மரங்கள் நெருக்கமாக உள்ள காடு இறும்பு, சிறிய அளவிலான இறும்பு குறுங்காடு, சிறு தூறல்கள் அல்லது புதர்கள் பரவியுள்ள காடு அரில் அல்லது பதுக்கை, மிக முதிர்ந்த முற்றிப் போன மரங்கள் உடைய காடு முதை, மரங்கள் கரிந்து போன காடு பொச்சை அல்லது சுரம், காவலுள்ள காடு அரண், என்ற வகைப்பாட்டு வன அறிவியலிலும் தமிழுலகு சிறந்துள்ளமைக்குச் சான்றன்றோ.
தமிழிலுள்ள நெய்தல் நிலப் பெயர்கள் நம் கடல்சார் அறிவியலுக்குத் தக்க சான்றாகும். பல்வகைக் கலன்களால் கடல்நீரில் ஆட்சி செய்வதற்கு முன்பு உலகின் தோற்றக் காலத்தில் கடப்பதற்கு அல்லாத நீர் நிலையைக்கடல் என்றனர். கண் பார்வையைக் கடந்து நிற்பதாலும் கடலின் எல்லை பார்ப்பவர் கண்ணுக்குப் புலப்படாததாலும் இப் பெயர் நிலைத்து நின்று விட்டது. ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலையை ஏரி என்றும் குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலையைக் குளம் என்றும் பெயரிட்ட நம் முன்னோர், கடலுக்கும் அதன் தன்மைகளுக்கேற்பப் பல்வகைப் பெயர்களை இட்டுள்ளனர். கடல் பரந்து உள்ளமையால், பரவை; ஆழமாக உள்ளமையால் ஆழி; உப்பு நீர் – உவர் நீர் – உடைமையால் உவரி; மழையை உண்டாக்குவதற்குரிய முகிலைக் கொள்வதற்கு உரிய இடம் என்பதால் கார்கோள்; மழைநீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகிய மூன்றும் இணைந்த நீர்ப்பரப்பு என்பதால் முந்நீர்; அலைகள் வீசுவதன் மூலம் பேரிரைச்சல் தோன்றுவதால் ஆர்கலி; என்பன போல் அம்பரம், அளக்கர், சலதி, வாரி, பெருநீர், அழுவம், தெண்டிரை முதலான 50 வகைப் பெயரிட்டுள்ளனர். (பிங்கல நிகண்டு பா எண் 584)
வயலும் வயல் சார்ந்த பகுதியுமான மருதநிலப் பெயர்கள் நில வகைப்பாட்டியலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைந்தமிழ் சிறந்திருந்தது என்பதற்குச் சான்றாகும். நிலத் தொகுப்பு வகையாக நெல், கரும்பு முதலிய பயிர்த் தொகுதியைச் ‘செய்’ என்றும் மிளகாய், கத்தரி முதலிய செடித்தொகுதியைத் ‘தோட்டம்’ என்றும் மா, தென்னை முதலிய மரத்தொகுதியைத் ‘தோப்பு’ என்றும் முல்லை, குறிஞ்சியில் உள்ள நிலத் தொகுதியைக் ‘காடு’ என்றும் மரமடர்ந்த இயற்கைத் தோப்பினைச் ‘சோலை’ என்றும் பாதுகாக்கப்படும் சோலையைக் ‘கா’ என்றும் கடற்கரைச் சோலையைக் ‘கானல்’ என்றும் மக்கள் வசிக்காத காட்டை ‘வனம்’ என்றும் புதுக்கொல்லையை ‘இதை’ என்றும் பழங்கொல்லையைச் ‘சுதை’ என்றும் நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தை ‘நன்செய்’ என்றும் ஓரளவு பண்படுத்தப்பட்ட நிலத்தைப் ‘புன்செய்’ என்றும் பாழ்நிலத்தைக் ‘கரம்பு’ அல்லது ‘களரி’ என்றும் விளையா நிலத்தைக் களர் அல்லது சவர் என்றும் அனைத்தும் உண்டாகும் நன்னிலம் உறாவரை என்றும் முல்லை நிலம்-புறவு; வான்மழையை எதிர்நோக்கியுள்ள விளைநிலம்-வானாவாரி (மானாவாரி என்பது சிதைந்த வழக்கு); மேட்டு நிலம் – மிசை; பள்ளமான நிலம்-அவல்; அரசிற்குரிய பண்படுத்தப்பட்ட நிலம்-புறம்போக்கு; உணவிற்கு விடப்படும் வரிவிதிக்கப் பெறா நிலம்-அடிசிற்புறம்; பயிர் செய்யாது புல், பூண்டு முளைத்துக் கிடக்கும் நிலம்-தரிசு; சிவந்த நிலம்- சிவல்; களிமண் நிலம்-கரிசல்; சரள் நிலம்-முரம்பு; நன்செய் தொடர்ந்து விளையும் நிலம்-வயல்; போரடிக்கும் களமுள்ள வயல்-கழனி; பழைமையான வயல்-பழனம்; நீர் நிறைந்த பள்ளமான வயல்- பண்ணை; சேறு மிகுந்த வயல் – செறு; என்பன போன்றும் உள்ள சொல்லாட்சி நிலத்திணையியலில் நாம் கொண்டுள்ள சிறப்பை உணர்த்தும்.
இவ்வாறு துறைதோறும் துறைதோறும் நாம் ஆராய்ந்தால் அருந்தமிழ்ச் சொற்களின் அறிவியல் சிறப்பை நன்கு உணரலாம். இவற்றை யெல்லாம் வெளிக் கொணரவும் பரப்பவும், நாம் நம் மொழியின் சிறப்பை உணர்ந்து இனியேனும் அதனைப் பேணவும் வேண்டும்.
அருந்தமிழ்ச் சொற்களின் அறிவியல் தன்மைகளை உணரும் நாம், அறிவியலையும் தமிழில் பயின்றால்தானே தலைநிமிர்ந்து வாழ இயலும்! தலைசிறந்து திகழ இயலும்!
No comments